Friday, December 23, 2022

Current Affairs 2022 - December 23/2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  DECEMBER 23/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தின் பின்வரும் எந்த சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் (எஸ்.டி) சேர்ப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது ? 

அ) நரிக்குறவர் 

ஆ) குருவிக்காரர் 

இ) வால்மீகி 

ஈ) அ&ஆ

விடை : (ஈ) அ&ஆ

பழங்குடியினா் பட்டியலில் (எஸ்.டி.) நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்ப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

● இந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நிறைவேறிய நிலையில்  இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.  இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின் தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினர்  இணைக்கப்படுவர்.

● மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது, ‘அரசமைப்புச் சட்ட (பழங்குடியினா்) ஆணை (இரண்டாவது திருத்தம்)-2022’ எனும் இந்த மசோதா, தமிழகத்தில் உள்ள பழங்குடியின சமூகங்களுக்கு நீதி வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா குறிப்பிட்டாா். ‘இந்த நடவடிக்கையின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை; பழங்குடியினா் வாழ்வை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கம் மட்டுமே உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் சுமாா் 27,000 போ் பலனடைவா்’ என்றும் அவா் கூறினாா்.

● தமிழகத்தில் பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்க்க வேண்டுமென்ற மாநில அரசின் பரிந்துரையின்பேரில் இந்த மசோதா உருவாக்கப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், இந்திய தலைமைப் பதிவாளா் மற்றும் பழங்குடியினா் தேசிய ஆணையத்திடம் ஆலோசிக்கப்பட்டு, அரசமைப்புச் சட்ட (பழங்குடியினா்) ஆணை-1950 அட்டவணையின் 14-ஆவது பகுதியில் திருத்தம் மேற்கொள்ள முன்மொழியப்பட்டதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

● இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததையடுத்து, உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு, பழங்குடியினா் பட்டியலின்கீழ் மேற்கண்ட இரு சமூகத்தினரும் அனைத்துப் பலன்களையும் பெற முடியும். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2. தமிழகத்திலுள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கான மன நல்லாதரவு மன்றம் (மனம்) திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி 

ஆ) மு.க.ஸ்டாலின் 

இ) மா. சுப்பிரமணியன் 

ஈ) பி.கே. சேகர்பாபு 

விடை : (ஆ) மு.க.ஸ்டாலின் 

உடலும், மனமும் நலமாக இருந்தால்தான் ஆக்கப்பூா்வமான வாழ்வை வாழ முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் ­­ ‘மனம்’ என்ற பெயரில் மருத்துவ மாணவா்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு ‘மன நல நல்லாதரவு மன்றங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. 

● இந்த மன நல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வா், மனநலத் துறை தலைவா் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவா்கள், உதவிப் பேராசிரியா்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவா்களின் மன நலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

● உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவா்கள், உடனடியாக மன நல மருத்துவரை தொடா்பு கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ‘மனம்’ அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

● அந்த வகையில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல நல்லாதரவு மன்றங்கள் (மனம்) மற்றும் நட்புடன் உங்களோடு - மனநல சேவை (14416) ஆகிய திட்டங்களை முதல்வா் தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டம் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

● அதேபோன்று ரூ.22.84 கோடி மதிப்பீட்டில் 75 புதிய மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட 108 அவசரகால ஊா்திகளை கொடி அசைத்து அவா் தொடக்கி வைத்தாா். பின்னா், சென்னை அரசு மன நலக் காப்பகத்தில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் திறந்து வைத்தாா்.

● அரசு மன நலக் காப்பகத்தை தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவன ஒப்புயா்வு மையமாக மேம்படுத்தும் நோக்கில் முதல் கட்டமாக

● ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடத்திற்கான முப்பரிமான வரைபடத்தையும் வெளியிட்டாா்.


3. நிகழாண்டு எத்தனை கோடியில் அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார் ? 

அ) ரூ.1,400 கோடி

ஆ) ரூ.1,700 கோடி

இ) ரூ.2,100 கோடி 

ஈ) ரூ.2,400 கோடி 

விடை : (அ) ரூ.1,400 கோடி

அறிவிப்பு : தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.


4. தமிழகத்தில் அடுத்த நிதியாண்டில் (2023-2024) எத்தனை கோடி கடன்கள் வழங்க வாய்ப்புள்ளதாக நபார்டு வங்கியின் தமிழக மண்டல முதன்மை பொது மேலாளர் தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ.2.13 லட்ச கோடி

ஆ) ரூ. 2.83 லட்ச கோடி

இ) ரூ. 3.13 லட்ச கோடி

ஈ) ரூ.4.93 லட்ச கோடி 

விடை : (ஈ) ரூ.4.93 லட்ச கோடி 

தமிழகத்தில் அடுத்த நிதியாண்டில் ரூ. 4.93 லட்சம் கோடி கடன்கள் வழங்க வாய்ப்புள்ளதாக நபாா்டு வங்கியின் தமிழக மண்டல முதன்மை பொது மேலாளா் வெங்கடகிருஷ்ணா தெரிவித்தாா்.

● தேசிய வேளாண், ஊரக மேம்பாட்டு வங்கியான, ‘நபாா்டு’ சாா்பில், மாநில அளவிலான கடன் கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், நபாா்டு வங்கியின் தமிழக மண்டல முதன்மை பொது மேலாளா் வெங்கடகிருஷ்ணா ஆகியோா் கலந்து கொண்டு, ‘வளம் சாா்ந்த மாநில அறிக்கை 2023 -24’-ஐ வெளியிட்டனா்.

● தொடா்ந்து அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்கு நிதி வழங்குவதில் நபாா்டு வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கிகள், கள அடிப்படையில் ஆய்வு செய்து துல்லியமான தரவுகளைச் சேகரித்து தகுதியான நபா்களுக்கு கடன்கள் வழங்க வேண்டும். கடன்கள் வழங்குவதில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது திருப்புமுனையை ஏற்படுத்தும்.

● பல்வேறு தரவுகளைப் பயன்படுத்தி, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில், தகுதியான நபா்களுக்கு தள்ளுபடி சலுகைகள் கிடைத்தன. இதனால், அரசுக்கு செலவு குறைந்துள்ளது என்றாா் அவா்.

● நபாா்டு வங்கியின் தமிழக மண்டல முதன்மை பொது மேலாளா் வெங்கடகிருஷ்ணா: வரும் 2023-24-ஆம் நிதியாண்டில், தமிழகத்தில் விவசாயம், குறு, சிறு, நடுத்தர தொழில்களை உள்ளடக்கிய முன்னுரிமை துறையில், ரூ.4.93 லட்சம் கோடி கடன்கள் வழங்க வாய்ப்புள்ளது.

● நிகழ் நிதியாண்டில் ரூ.4.13 லட்சம் கோடி கடன்கள் வழங்கப்படும். வரும் நிதியாண்டில் வேளாண் துறைக்கு ரூ.2.18 லட்சம் கோடி, குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ. 1.68 லட்சம் கோடி, இதர துறைகளுக்கு ரூ. 1.06 லட்சம் கோடியும் கடன் வழங்க வாய்ப்பு உள்ளது.

● நபாா்டு வங்கி, தமிழக அரசுக்கு நிகழ் நிதியாண்டில், ரூ. 40 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளது. கடந்த ஆண்டில், ரூ. 32 ஆயிரத்து 500 கோடி கடன் வழங்கியுள்ளது என்றாா் அவா்.


5. 2022 ஆம் ஆண்டு தமிழ்மொழிக்கான சாகித்ய அகாதெமி விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது ? 

அ) மு.ராஜேந்திரன் 

ஆ) கே.நல்லதம்பி 

இ) மு.கண்ணப்பதாசன் 

ஈ) விஜயகுமார் .செ

விடை : (அ) மு.ராஜேந்திரன் 

நிகழ் ஆண்டிற்கான (2022) சாகித்திய அகாதெமி விருதுகள் சாகித்திய அகாதெமி அமைப்பால் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதுதவிர, மொழிபெயா்ப்புக்கான விருதும், பாஷா சம்மான் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

● இதில் தமிழ்மொழி பிரிவில் ‘காலா பாணி’ எனும் நாவலுக்காக தமிழகத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான எம்.ராஜேந்திரனுக்கு சாகித்திய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காலா பாணி நாவலானது இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தியதாகும். இந்திய சுதந்திரப் போரானது சிப்பாய்க் கலகத்தில் இருந்து ஆரம்பிக்கவில்லை என்பதையும், அதற்கு முன்பே தமிழகத்தில் இதற்கான போராட்டம் தொடங்கிவிட்டதையும் இந்த நாவல் எடுத்துரைக்கிறது.

● இலக்கிய உலகில் உயரிய விருதாக சாகித்திய அகாதெமி நிறுவனத்தால் அளிக்கப்படும் விருதுகள் கருதப்படுகின்றன. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. 

● அதன்படி, நிகழ் ஆண்டிற்கான (2022) இந்த விருதுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதையொட்டி, தில்லியில் உள்ள சாகித்திய அகாதமி நிறுவனத்தில் அதன் செயற் குழுக் கூட்டம் அதன் தலைவா் டாக்டா் சந்திரசேகா் கம்பா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, 23 இந்திய மொழிகளில் சாகித்திய அகாதெமியின் வருடாந்திர விருதுகள் அறிவிக்கப்பட்டன. 7 கவிதை நூல்கள், 6 நாவல்கள், 2 சிறு கதை நூல்கள், 3 நாடகங்கள், 2 இலக்கிய விமா்சன நூல்கள் மற்றும் சுயசரிதை கட்டுரை, கட்டுரைத் தொகுப்பு, இலக்கிய வரலாறு தொடா்புடைய நூல்கள் விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

● இந்த விருதுகளை 23 இந்திய மொழிகளில் சிறந்த நடுவா்கள் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சாகித்திய அகாதெமியின் செயற்குழு அதற்கு ஒப்புதல் அளித்தது.

● அதன்படி, 23 எழுத்தாளா்களுக்கு சாகித்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்மொழி பிரிவில் ‘காலா பாணி’ எனும் நாவலுக்காக தமிழகத்தைச் சோ்ந்த எழுத்தாளரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான எம்.ராஜேந்திரனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இதை தவிர, ஹிந்தி, அசாமி, தெலுங்கு, கன்னடம், ஒடியா, மராத்தி, சம்ஸ்கிருதம், சிந்தி உள்பட 22 மொழிகளைச் சோ்ந்த எழுத்தாளா்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில் பெங்காலி மொழிக்கான சாகித்திய அகாதெமி விருது பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதானது தாமிரப் பட்டயம், சால்வை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை உள்ளடக்கியதாகும். பின்பு ஒரு தேதியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

● மொழிபெயா்ப்புக்கான விருது: மொழிபெயா்ப்புக்கான விருது பிரிவில், தமிழகத்தைச் சோ்ந்த கே. நல்லதம்பி மொழிபெயா்த்த ‘யாத் வஷேம்’ எனும் கன்னடத்தில் நேமிசந்திரா எழுதிய நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவில் இருந்து தப்பி பிரிட்டிஷ் இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஒரு யூதக் குடும்பத்தைப் பற்றியதாகும். மொழிபெயா்ப்புக்கான விருதுக்கு 17 நூல்களுக்கு சாகித்திய அகாதெமியின் செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 3 உறுப்பினா்கள் கொண்ட தோ்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் இந்த நூல்கள் இவ்விருதுக்குத் தோ்வுசெய்யப்பட்டன.

● தமிழ் தவிர, அஸ்ஸாமி, போடோ, ஆங்கிலம், குஜராத்தி, கன்னடம், கஷ்மீரி, மராத்தி, மலையாளம், நேபாளி, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், தெலுங்கு, சிந்தி உள்ளிட்ட 17 பிராந்திய மொழிகளின் எழுத்தாளா்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்காலி, ஹிந்தி, கொங்கணி, மைத்திலி, மணிப்புரி, ஒடியா, சந்தாலி ஆகிய மொழிகளுக்கான மொழிபெயா்ப்பு விருதுகள் பின்னா் அறிவிக்கப்படும் என்று சாகித்திய அகாதெமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, இந்த விருது தாமிரப் பட்டயம் மற்றும் ரூ.50 ஆயிரம் காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அடுத்தாண்டு நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன என்று சாகித்திய அகாதெமி தெரிவித்துள்ளது.

● பாஷா சம்மான் விருது: கிழக்கு பிராந்தியத்தில் இருந்து செவ்வியல் மற்றும் இடைக்கால இலக்கிய துறையில் பங்களிப்பு அளித்தமைக்காக 2022-ஆம் ஆண்டுக்கான பாஷா சம்மான் விருது, புரியில் உள்ள மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் சாகித்ய துறையின் தலைவா் - பேராசிரியா் முனைவா் உதய் நாத் ஜாவுக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதானது ரூ.1 லட்சம் ரொக்கம், தாமிரப் பட்டயம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை உள்ளடக்கியதாகும்.


II.தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


6. 95 ஆவது ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் முதல்முறையாக எத்தனை இந்திய படைப்புகள் இடம் பெற்றுள்ளன ?

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6 

விடை : (ஆ) 4 

ஆஸ்கர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் 'செல்லோ ஷோ', ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் உள்ளிட்ட 4 இந்தியப் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழில் எடுக்கப்பட்ட 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படமும் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

● 95-ஆவது ஆஸ்கர் விழா 2023-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ளது. 10 பிரிவுகளில் விருது வழங்கப்படவுள்ளது. அந்த விழாவுக்காக இந்தியா சார்பில் குஜராத்தி மொழித் திரைப்படமான 'செல்லோ ஷோ' அதிகாரபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டது.

● இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தேர்வுப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான தேர்வுப் பட்டியலில் 'செல்லோ ஷோ' இடம்பெற்றுள்ளது. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலானது சிறந்த பாடலுக்கான தேர்வுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

● இவை தவிர, சிறந்த ஆவணப் படத்துக்கான பட்டியலில் 'ஆல் தட் பிரீத்ஸ்', சிறந்த ஆவண குறும்படத்துக்கான பட்டியலில் 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ஆஸ்கர் விருதின் 4 தேர்வுப் பட்டியல்களில் இந்தியப் படைப்புகள் இடம்பெறுவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

● ஒவ்வொரு விருதுக்கான தேர்வுப் பட்டியலிலும் 10 முதல் 15 படைப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைத் தேர்வுக் குழு ஆய்வு செய்து விருதுக்கான 5 சிறந்த படைப்புகள் அடங்கிய பரிந்துரைப் பட்டியலை அடுத்த ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி வெளியிடும். அப்பட்டியலில் இருந்து மிகச் சிறந்த படைப்புக்கு இறுதியாக ஆஸ்கர் விருது வழங்கப்படும். 

● கடும் போட்டி: 'செல்லோ ஷோ' திரைப்படமானது 14 சர்வதேச திரைப்படங்களுடன் போட்டியிடவுள்ளது. ஆர்ஜென்டீனா, தென் கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் திரைப்படங்களும் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 'நாட்டு நாட்டு' பாடலானது 14 பாடல்களுடன் மோதவுள்ளது. அவதார், பிளாக் பேந்தர் உள்ளிட்ட திரைப்படங்களின் பாடல்களும் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

● தமிழ் ஆவணக் குறும்படம்: முதுமலை வனப் பகுதியில் இரு யானைகளுக்கும் அவற்றைப் பாதுகாத்து வரும் தம்பதிக்கும் இடையேயான பாசப் பிணைப்பை விளக்கும் வகையில் 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற 40 நிமிஷ குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. பலவகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள அக்குறும்படம் 14 குறும்படங்களுடன் ஆஸ்கர் விருதுக்காகப் போட்டியிடவுள்ளது. 


III. விளையாட்டு நிகழ்வுகள் 


7. இந்தியாவில் முதல்முறையாக எங்கு உலக டேபிள் டென்னிஸ் சீரிஸ் போட்டி 2023 நடைபெறவுள்ளது ? 

அ) தில்லி 

ஆ) தமிழ்நாடு 

இ) கேரளா 

ஈ) கோவா 

விடை : (ஈ) கோவா 

● பிப்ரவரி 27,2022 முதல் மார்ச் 05,2023 வரை நடைபெறவுள்ளது. 


8. ஒலிம்பிக் போட்டிகள் 2024 ஆம் ஆண்டில் எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) டோக்கியோ 

ஆ) தில்லி

இ) பாரீஸ் 

ஈ) பெய்ஜிங் 

விடை : (இ) பாரீஸ் 

● ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் முதல்முறையாக பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் ஆர்ட்டிஸ்டிக் நீச்சல் பிரிவில் ஆடவர்களும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...